Thirukalukundram Arulmigu Vedhagiriswarar temple

Thirukalukundram.in

Thirukalukundram.in

ருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் -திருக்கழுக்குன்றம்




Arulmigu Vedhagiriswarar Temple - Thirukalukundram !!

இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்  

இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்

இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)  

தல மரம் : வாழை மரம் (கதலி)

தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்





கல்வெட்டுக்களில் திருக்கழுக்குன்றம்

கல்வெட்டுக்களில் திருக்கழுக்குன்றம்

Thirukalukundram Kalvettukkal



கல்வெட்டுக்களில் திருக்கழுக்குன்றம் எனவும், உலகளந்தசோழபுரம் எனவும் வழங்கப்படுகிறது. கி.பி.8ஆம் நூற்றாண்டில், திருக்கழுக்குன்றம் எனவே வழங்கப்படுகின்றது. இப்பெயரே தொடர்ந்து இன்றளவும் வழங்கப்பட்டு வருவது சிறப்பு! ஆனால் இடைக்காலத்தில், கி.பி.10ஆம் நூற்றாண்டில் இராஜராஜனின் சிறப்பு பெயர் களுள் ஒன்றான உலகளந்தான் என்றபெயரில் உலகளந்த சோழபுரம் என்பதும், வழங்கி வந்துள்ளது.

பல்லவர்கள் / Pallavarkal

கி.பி.7ஆம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தை பல்லவர்கள் ஆட்சிப்புரிந்தனர்.இவர்களில் சிறந்தவனான முதலாம் நரசிம்மவர்மனின்(630-668) கீழ் இப்பகுதியின் ஆட்சி செய்தவர்கள் வாகாடக சிற்றரசர்கள்.இவ்வரசர்களில், ஸ்கந்தசிச்யன் என்பவன் இக்கோயிலுக்குதானம் வழங்கியுள்ளான். பின்னர், பல்லவர்கள் வீழ்ச்சியடைந்து, சோழர்களின் ஆட்சி இப்பகுதியில் பரவியது. எனவே முன்னர் வழங்கப்பட்ட நிலதானமும், அதனை கொண்டு எடுக்கப்பட்ட விழாவும், நடைபெறாது நின்றதால், சோழ மன்னன் முதலாம் ஆதித்தனின் (கி.பி.871-907) 27ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.898) இக்கொடையினைப் புதுபித்து அளித்துள்ளான். இதன் மூலம் அக்காலமன்னர்கள் இறைவனுக்கு அளித்த முக்கியத்துவம் நன்கு புலப்படுகின்றது.

சோழர்கள் / Chozharkal

தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெறும் சோழமன்னன் முதலாம் இராஜேந்திரனின் (கி.பி.1012-43) 16ஆம் ஆட்சிகாலத்தில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து, களத்தூர் கோட்டத்தில் இருந்துள்ளது. இக்கல்வெட்டில், திருக்கழுக்குன்றமே ஒரு கூற்றமாகத் திகழ்ந்துள்ளது. இக்கோயில் மூலஸ்தானத்தை இறைவன் தேசவிடங்க தேவர் என அழைக்கப்படுகின்றர்;. இவ்விறைவன் கோயிலில் விளக்கெரிக்க 90 ஆடுகளை, ஆமூர் கோட்டம், மாமல்லபுரமாகிய சனனாதபுரத்தைச் சேர்ந்த சங்கரப்பாடியன், கொள்ளம்பாக்கிழான் மாதேவன் என்பவன் வழங்கினான். அக்காலத்தில் மாமல்லை சனனாதபுரம் என வழங்கப்பட்ட செய்தி அறியப்படுகின்றது.

முதலாம் இராஜாதிராஜனின் கி.பி.1044ஆம் ஆண்டில், திருக்கழுக்குன்றமான உலகளந்த சோழபுரம் நகரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகரைச் சேர்ந்த வணிகர்கள், மலைமீது எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு சிவப்பு சம்பா அரிசியினைக் கொண்டு படைக்கப்படும் அமுதிற்கும், அர்ச்சனைக்கும், ஸ்ரீபலிபூஜைக்கும் வரி நீக்கிய நிலம் அளிக்கப்பட்டது. இக்கல்வெட்டில் திருக்கழுக்குன்றம் ஒரு சிறந்த நகரமாக இருந்தது அறியப்படுகின்றது.

இரண்டாம் இராசேந்திரன் (கி.பி.1052-64) ஐந்தாம் ஆண்டிலும் ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் களத்தூர் கோட்டத்தில் இருந்ததும், விளக்கெரிக்க 90 ஆடுகள் வழங்கப்பட்டது. சோழர்களில் சிறந்தவர்களில் ஒருவனான முதலாம் குலோத்துங்கனின் (கி.பி.1070-1120) 14ஆம் ஆட்சியாண்டில் அளிக்கப்பட்ட விளக்குதானமும், இவனது 23ஆம் ஆண்டில் அருகில் உள்ள கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலம் திருக்கழுக்குன்றத்தில் இருந்ததாலும், அதற்குரிய எல்லைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. திருக்கழுக்குன்றத்திற்கு அருகில் வானவான்மாதேவி சதுர்வேதி மங்கலம் (தற்போதைய மானாமதி) என்ற ஊரில் இருந்த ஸ்ரீஇராசேந்திர சோழ விண்ணகர ஆழ்வார் கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டது. இந்நிலம் திருக்கழுக்குன்றத்தில் இருந்ததால், கல்வெட்டு திருக்கழுக்குன்றத்திலும் வெட்டி வைக்கப்பட்டது. இதே மன்னனின் 43ஆம் ஆட்சி ஆண்டில், அறுபத்திமூன்று நாயன்மார்களுக்காக மடம் ஒன்று அமைக்க, 10 காசுகளுக்கு நிலம் வாங்கப்பட்டச் செய்தி அறியப்படுகின்றது.

விக்கிரம சோழன் (கி.பி.1120-1135), இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1178-1216) ஆகியோர் திருக்கழுக்குன்ற கோயிலில் விளக்கெரிக்க ஆடுகளை வழங்கியுள்ளனர்.



காடவர்கோன் / Kadavarkon

பல்லவர்களின் வழிதோன்றலான காடவர்கோன் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இவனது 21,33ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளில் நந்தா விளக்கெரிக்க, ஆடு, மாடு மற்றும் நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

பாண்டியர்கள் / Pandiyarkal

கி.பி.13ஆம் நூற்றாண்டில் எழுச்சி அடைந்த பாண்டியர்கள், தமிழகத்தில் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இவர்களது கல்வெட்டுகள் பல இப்பகுதியில் காணப்படுகின்றன. பாண்டிய மன்னன் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் கி.பி.1259ஆம் ஆண்டுக் கல்வெட்டில், பாண்டிய நாட்டைச் சேர்ந்த அதியன் என்பவன், திருக்கழுக்குன்ற கோயிலில், பொனிட்டிசுரமுடையான் என்ற பெயரில் லிங்கத் திருவுருவினை எழுந்தருளிவித்துள்ளான். மேலும் 67½ பணம் நிவந்தமும் இவ்விறைவனுக்கு வழங்கியுள்ளான். மூன்றாம் மாறவர்மன் விக்கிரமன் (1281-1289) 7ஆம் ஆண்டில், இங்குள்ள சண்முக பிள்ளையார் கோயிலில் விளக்கு வைக்க மாடுகள் வழங்கப்பட்டன.



சம்புவரையர்கள்/ Sambu Varayarkal

திருக்கழுக்குன்றத்தில் சம்புவரையர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவர்கள் சோழ, பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், பல்லவர்களின் வழிவந்தோர் ஆவார்கள். இவர்களில் திருமல்லி நாதனான இராசநாராயணன் (கி.பி.1337-1363) இரண்டாம் இராசநாராயணன் (1338-1363) மூன்றாம் இராசநாராயணன் (1356-1379) ஆகியோர்கள் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளில், நிலம் மற்றும் விளக்கு தானங்கள் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு கல்வெட்டில் “தம்பிரானார் திருவடி நிலைக்கோல்” என்ற கோல் 18 அடி நீளமுடையது. இதன்மூலம், இராசநாராயணன் திருவீதி என்ற பெரிய சாலை அளக்கப்பட்டது. இச்சாலை ஐந்து கோல் அகலம், அதாவது 90 அடி அகலம் இருக்கும்படி அளந்து இருபுறமும் கல் நடப்பட்டது. இத்திருவீதி வழியாக திருக்கழுக்குன்ற இறைவனை, கடல் நீராட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். எனவே, தற்போதைய திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம் சாலையே அக்காலத்தில் இராசநாராயண திருவீதியாக இருத்தல் கூடும். மேலும், இக்கல்வெட்டு ஒன்றில் “இராசகேசர நாழி” என்ற முகத்தளவை குறிப்பிடப்பட்டுள்ளது.